தமிழ்மணம்

Wednesday, July 22, 2015

டாஸ்மாக் கடை (சமூகத்தின் சாக்கடை)

டாஸ்மாக் கடை என்னும் சா(ராய)க்கடை சமூகத்தில் கலந்துவிட்டது. அதன் விளைவாக இன்றுவரை நம் தமிழ்நாட்டில்  எண்ணிலடங்கா துயரங்கள் நிகழ்ந்துவிட்டது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் நிகழவிருக்கிறது என்பது தான் சமுதாயத்தை அச்சுறுத்தக்கூடியதாக இருக்கிறது.


சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான "நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு நான்கு வயது குழந்தையை வற்புறுத்தி, மது அருந்த வைக்கும்" காணொளி காட்சியைக்கண்டு அதிர்ந்தே போனேன்...! பள்ளிக்குழந்தைகளும், கல்லூரி பெண்களும் கூட அடிமையாகிக்கொண்டிருப்பதுதான் கவலையின் உச்சம்.இந்த மானங்கெட்ட மதுவை அருந்துவதால் உடனடியாக ஆல்கஹால் இரத்தத்தில் கலந்து முதலில் மூளைக்குச் சென்றுதான் பாதிப்பை உண்டாக்கும். பிறகுதான் கல்லீரல். நம் மூளை தானே நமக்கு கட்டுப்பாடு அறை அதுவே பாதிப்புக்குள்ளாகி கட்டுப்பாட்டை இழந்தால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து கைவிடப்பட்ட வாகனங்கள் போலதான் நாமும் பெரும் விபத்துக்குள்ளாகி உயிரிழக்க நேரிடுகிறது. முதலில் அளவோடு நிறத்திக்கொள்ளலாம் என்றே எல்லோரும் ஆரம்பிப்பார்கள். அதுதான் அழிவின் ஆரம்பம். சிறு இன்பத்திற்காக ஆரம்பிக்கும் இப்பழக்கம் பின் பெரும் துன்பத்தை உண்டாக்கி, நாளடைவில் நம் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்பதை மறக்கவேண்டாம். இந்த ஆல்கஹாலுக்கு மனிதனை அடிமையாக்கும் அசுர குணம் உண்டு. அதனால்தான் பலர் அறவே விட்டொழிக்க நினைத்தும் கூட விடமுடியாமல், அதன் அடிமை வலையில் சிக்கி சின்னாபின்னமாகிவிடுகிறார்கள்...!
வேலைக்குச்சென்றுவரும் குடும்பத்தலைவர்கள் பலர் தன் வேலைப்பளுவின் அலுப்பைப்போக்கவே குடிப்பதாக கூறுவர். இப்படி சப்பை காரணம் சொல்லுபவர்களே... குடும்பத்தலைவிகள் ஒருநாளில் வீட்டில் சந்திக்கும் வேலைப்பளுவைப்போக்க பதிலுக்கு அவர்களும் குடித்தால் குடும்பத்தின் நிலை என்ன என்பதை உணருங்கள். மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, குடும்பத்தை வழிநடத்த வழிதெரியாமல் வலியில் தவிக்கிறான். பின் சமுதாயத்திலும் நற்பெயரை இழந்து நான்கு சுவற்றுக்குள் நாசமாகி, அவனை நம்பியிருக்கும் குடும்பமும் நடுத்தெருவிற்கு வந்து, இச்சமூகமும் நாசமாகிக்கொண்டிருக்கிறது.


நான் நேரடியாக கண்ட ஒரு சம்பவத்தை இங்கே கூறவிளைகிறேன்...
என் கண் முன் நடந்த நிஜம்.
"ஒரு நாள் இரவு இராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு தாயும் மகளையும் கண்ணீருடன் காண நேர்ந்தது ...நான் வெகு தொலைவில் நின்று கொண்டிருந்தேன் ... அருகில் செல்வதற்குள் கூட்டம் கூடியது.. ஒரு 40 வயது மதிக்க தக்க குடும்ப தலைவன் செம போதையில் தள்ளாடிக்கிடந்தார்... அவரை சுய நினைவிற்கு கொண்டு வர முடியாமல் அருகில் அவரது மனைவியும், 16 வயது மதிக்கத்தக்க மகளும் கண்ணீருடன்...! பிறகு எலுமிச்சைப்பழத்தை அவர் தலையில் தேய்த்து விட்டும் வாயில் பிழிந்து விட்டும், போதையை தெளியவைக்க இருவர் போராடிக்கொண்டிருந்தனர். பாவம் அவரது மனைவியும் மகளும். பரிதவித்துக்கொண்டிருந்தனர். மிகவும் வேதனையடைந்தேன்."


தலைகுனிய வைக்கும் விடயம் என்றால், தன் வருமானத்திற்காக அரசாங்கமே டாஸ்மாக்கை நடத்துவதுதான்... வருமானத்தை அதிகரிக்க பல தொழில்வளர்ச்சிகளை ஆராய்ந்து மாற்றுவழி கண்டறியாமல் சமூகத்தை அரசாங்கமே அழித்துக்கொண்டிருக்கிறது என்பது அவமானத்திற்குரிய விடயம். ஏற்கனவே வெள்ளையர்களின் ஆட்சியில் போராடி சுதந்திரம் பெற்ற நாம் இந்த சுயநல கொள்ளையர் (அரசியல்வாதி)களின் ஆட்சியிலிருந்து மறுபடியும் போராட வேண்டிய இக்கட்டான நேரம் இது...!

படித்தது பிடித்திருந்தால் கமெண்டில் தெரிவிக்கலாம்..
எழுத்துக்கள் என்னை விமர்சிப்பதாகக்கூட இருக்கலாம்....! நன்றி.

No comments:

Post a Comment