தமிழ்மணம்

Friday, July 31, 2015

அப்துல்கலாம் ஐயாவிற்கு கண்ணீரஞ்சலி செலுத்திய கணதருணங்கள்


ரியாக மூன்று நாட்களுக்கு முன்பு, ஜீலை 27ம் தேதி, இரவு 7.45 மணி அளவில் எப்போதும்போல பொழுதுபோகாமல் முகநூலில் மூழ்கிக்கொண்டிருந்தேன்.. அப்போதுதான் அந்த துயரச்செய்தியை துரதிர்ஷடமாக கண்டுவிட்டேன்.. News 7 என்ற செய்திச்சேனல் அப்துல்கலாம் ஐயா மாரடைப்பால் இறந்துவிட்டதாக செய்தியை வெளியிட்டிருந்தது. இடி விழுந்தால் போல் இருந்தது. இருந்தாலும் என்னால் நம்பமுடியவில்லை சேனல்கள் தன் சுயலாபத்திற்காக பொய் செய்திகளை வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது என நினைத்துக்கொண்டேன்.. சிறிது நேரத்தில் மனசு கேட்காமல் தொலைக்காட்சிப்பெட்டியை தொந்தரவு செய்தேன். அனைத்து சேனல்களையும் மாற்றி மாற்றி பார்த்தேன், செய்தி உண்மையாகி, என்னை ஊமையாக்கிவிட்டது. எல்லா செய்தி சேனல்களும் ஃப்ளாஸ் நியூஸாக, ஐயா இறந்த செய்தியை உறுதிப்படுத்திவிட்டது. கண் ஓரங்களில் என்னையறியாமலே கண்ணீர் ஓடுகிறது கட்டுப்படுத்த முடியாமல்...! பின், மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அன்றைய இரவை கழித்தேன். மறுநாள் ஐயாவின் உடல் எங்கே அடக்கம் செய்யப்போகிறார்கள்? ஐயாவிற்கு அஞ்சலி செலுத்த எனக்கு வாய்ப்பு வாய்க்குமா? என பல வினாக்கள் என்னுள்.. அன்றைய நாள் செய்தி சேனல்கள் முன்னால் அமர்ந்த படியே நகர்ந்தது. பின் 29ம் தேதி புதன்கிழமை அன்று, ஐயாவின் உடல் இராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், மறுநாள் காலை 11மணிக்கு இராமேஸ்வரத்தில், பேய்கரும்பு என்ற பகுதியில் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் செய்தியறிந்தேன். அன்று ஐயாவிற்கு அஞ்சலி செலுத்த செல்லும்போது வழியெங்கும் விழிபிதுங்குமளவிற்கு கூட்டம்... வியந்து போனேன் இது இராமேஸ்வரம் தானா என்று...! அவரின் உடலை பார்த்தால் மட்டும் போதுமென மரத்தில் ஏறிநிற்கும் இன்னொரு கூட்டம்...!ஐயாவிற்கு அஞ்சலி செலுத்த எனக்கு பாக்கியம் இல்லை என நினைக்க வைத்துவிட்டது அந்த நீண்ட வரிசையும், நிற்க இடமில்லாதளவில் அந்த மக்கள் கூட்டமும்...! அவர் பிறந்த ஊரில்தான் நான் பிறந்தேன் என்பதும் பாக்கியம்தான் என மனதை தேற்றிக்கொண்டேன்.. இவ்வளவு பேர் ஏன் ஒன்றுசேர வேண்டும். அவர் முன்னாள் குடியரசுத்தலைவர் என்பதாலா ? இல்லை... ஏவுகணை நாயகன், அணுசக்தி விஞ்ஞானி என்பதாலா? இல்லவே இல்லை. அதையும் தாண்டி, என் சுதந்திர நாடு மற்ற நாடுகளிடம் கையேந்தாமல் தன்னிகரற்ற நாடாக, வல்லரசு நாடாக மாற வேண்டுமென தன்னலமின்றி, ஓய்வில்லாமல் உழைத்த மனிதநேயமிக்க மாமனிதர் என்பதாலேதான்...! பின் சிறிதுநேரம் அமைதியாக நண்பர்களுடன் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டிருந்தேன். பின் ஒரு தூரத்தில் அப்துல்கலாம் ஐயாவின் ஆலோசகர் பொன்ராஜ் அவர்கள் நின்றுகொண்டிருந்ததையும், அவரைச்சுற்றி சிலபேர் பேசிக்கொண்டிருப்பதையும் காணமுடிந்தது. சரி அவருடன் கடைசிவரை உடனிருந்த அந்த பாக்கிய மனிதரையாவது சந்தித்துவிட்டு வருவோமென விரைந்தேன். அருகே சென்றவுடன் அவரோ, ஐயா விட்டுச்சென்ற பணிகளையும், அவர் செய்ய நினைத்த செயல்களை நாம்தான் செய்தாகவேண்டும் எனவும், ஐயா இன்னும் செய்ய இருந்த சமுதாயப்பணிகளையும் பட்டியலிட்டுக்கொண்டிருந்தார் கலக்கத்துடன்...!
பின் அவருக்கே தெரியாமல், அவர் அருகில் நின்று செல்பேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். சற்றும் எதிர்பாராத சில நொடிகளில் பொன்ராஜ் அவர்கள் ஐயாவின் உடலை நோக்கிச்சென்றார். அவருடன் சிலபேர் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள் அதில் அதிர்ஷ்டவசமாக நானும் என் நண்பர்களும்..! வியப்பில் ஆழ்ந்து, வரிசையில் நின்றுகொண்டிருந்தேன்..


அருகில் சென்று ஐயாவின் உடலை நெருங்கிவிட்ட தருணத்தில் கலங்கிவிட்டேன்...! நான் எடுத்த புகைப்படமும் கூட கலங்கிவிட்டது(Out of focus).

ஐயாவின் உடலிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு வெளியில் வருகிறேன் ஏதோ சாதித்துவிட்டதுபோல் உணர்வுடன்... ஆம், சாதனைகள் பல புரிந்த மனிதனுக்கு அஞ்சலி செலுத்தும் பாக்கியம் கிடைத்ததே சாதனை தானே...! ஐயாவின் ஆசையை நிறைவேற்ற, என் இந்தியநாடு 2020ல் வல்லரசாக உழைப்பேன் என்ற உறுதிமொழியுடன்... இரா.பிரசாந்த்

No comments:

Post a Comment