தமிழ்மணம்

Tuesday, July 7, 2015

என் இனிய பொன் நிலாவே (தொடர் கதை)

                                                            பகுதி-1

னதை மயக்கும் மாலைப்பொழுதின் வேளையில் ஓர் திருமண நிச்சயதார்த்தத்திற்கு புகைப்படம் எடுக்கச்சென்றிருந்தேன். அங்கேயே எனக்கும் காதல் நிச்சயமாகும் என்பதை அறியாமல் நின்றிருந்தேன். அங்கு குழந்தைகளின் துள்ளலும், என் வயது இளசுகளின் ஜொள்ளலும் அதற்கேற்ற பெண்களின் எள்ளலுமென மண்டபமே களைகட்டியது... இதுபோக, நகை புடவை விசாரிப்புகளும் வயதானவர்களின் நலம் விசாரிப்புகளும் கூட அரங்கில் அரங்கேறிக்கொண்டிருந்தன. புகைப்படக்கலைஞன் என்றாலே நாளாபுறமும் என்ன நடக்கிறது என்பதை கவனிக்கத்தாக வேண்டுமே...! அப்பொழுதுதான் மும்முரமாக மணமக்களின் பிம்பங்களை என் கேமராவுக்குள் கொண்டுவந்தேன். புரியவில்லையா? அதாவது மணமக்களை போட்டோ எடுத்துக்கொண்டிருந்தேன். மணமக்கள் மோதிரம் மாற்றும் நேரம் பார்த்து ஒலித்தது என் செல்(ல)பேசி... அச்சமயம் அழைத்தவருக்கு பதிலளிக்க முடியவில்லை. நீண்டநேரம் ஒலித்துக்கொண்டிருந்தது. திரும்ப திரும்ப அழைப்பு வந்தது காரணம் நண்பன் ஆயிற்றே... சைலண்ட் மோடில் கூட போடமுடியாத நிலை.
அந்த ரிங்டோன் பாடல் "என் இனிய பொன் நிலாவே.. பொன்நிலவில்ன் கனாவே...!"
ஆம் நான் இளையராஜாவின் இசைப்பிரியன்.அருகில் இருந்த அந்த அழகிய காதுகளிலும் ஒலிக்க,மறுகணம் அந்த பாவையின் பார்வை படர்ந்தது இந்த பைத்தியக்காரன் மேல். ஏனோ மெல்ல பூவிதழ் மலர்ந்தாள்.
அடுத்த நொடியே என் கவனம், மெளனம் கண்டது. காரணம் அந்த புயல் பார்வை என்னிடம் மையம் கொண்டது. பெண்ணின் பார்வைகளை பற்றி எத்தனையோ கவிஞர்கள் வர்ணித்திருந்தாலும், வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாத பார்வைகளுக்கு சொந்தக்காரி அவள்.


பல பெண்களைக் கடந்திருந்தும் கூட, இனி இவளைக்கடக்க முடியாமல் கவிழ்ந்துவிடுவேனோ அச்சம். ஒருபக்கம் திருமண நிச்சயதார்த்தம், மறுபக்கம் காதல் நிச்சயதார்த்தம்... மூளை சொல்வதை மனம் கேட்க மறுக்கிறது. ஆம் மனம் அவள் பக்கமே இருக்கிறது. தப்பித்தாக வேண்டுமென அங்குமிங்கும் அலைபாய்கிறேன். திரும்ப திரும்ப அவள் பக்கமே தலைசாய்கிறேன். நான் மட்டும்தான் இங்கே இப்படி நினைத்துக்கொண்டிருக்கிறேனா? அவள் நினைப்பது என்னவோ? எழுந்தது வினா... பெண்களின் மனதை புரிந்துகொண்டவர் இவ்வுலகில் எவருமில்லையே. நான் மட்டும் விதிவிலக்கா என்ன... மனதை மறுபக்கம் திருப்ப, குழந்தையை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தேன்.ஹலோ எக்ஸ்யூஸ் மீ.. மெல்லிய குரல் மிக அருகில் எனக்கு பின்புறம் ஒலித்தது. சற்றும் எதிர்பார்க்கவில்லை ஆம் அவளே தான். இதயம் படபடக்க தொடங்கியது மிக அருகில் உதயமான அவள் முகம் கண்டு. பேச்சு வரவில்லை மூச்சு மட்டும் மின்னல் வேகத்தில் வருகிறது. சர்வம் படத்தில் த்ரிஷாவை பார்த்த ஆர்யாவை போல் மனதில் ஒலிக்கிறது இளையராஜாவின் பிண்ணனி இசை. சில நொடிக்கு பின் "ம்" என்றேன்.


அவள், என்னோட அக்கா மேரஜ்க்கு போட்டோ எடுக்கணும் உங்க கான்டெக்ட் நம்பர் தர்றீங்களா என்றாள். நம்பரை உளறினேன் ஆம் நம்மூர் மொபைல் நம்பர் மொத்தம் பத்து தானே. நான் இரண்டு அதிகம் சேர்த்து பண்ணிரெண்டு நம்பரை கூறிவிட்டேன்.உடனே அவள் ஃபாரின்ல இருக்கீங்களா என்றாள் காமெடியாக. நான் இல்லையே ஏன் என்றேன். பின்னே 12 நம்பர் சொல்றீங்க என்றாள். பின் சிரிக்கத்தொடங்கிவிட்டாள். நானோ அவளின் சிரிப்புச்சிறையில் அடைபட்டுவிட்டேன்.. ஜாமீன் கிடைப்பது கடிது. பின் சரியான நம்பரைக்கூறினேன். அவளது விரல் அழுத்தத்தில் பதிவானது என் எண்கள்.. அவள், "ஐ வில் கால் யூ" என விடைபெற்றாள். எனக்கோ "ஐ லவ் யூ" சொல்லி என் காதலுக்கு ஜடை போட்டதுபோல் இருந்தது. விரைவில் பூ வைக்கப்படும்...!

காதல் தொடரும்...!

                                                     பகுதி-2


திருமண நிச்சயதார்த்தமும் ஒரு வழியாக முடிந்தாயிற்று... வெளியில் அவள் செல்லும் பாதையை பாரத்துக்கொண்டே 'செல்'லும் கையுமாக நின்றுகொண்டிருந்தேன்.. அவள் தலைமுடியின் முடிவில் முடிந்தது அன்றைய நிகழ்வு.. மறுநாள் விடிந்தது, வழக்கம்போல்தான் தொடங்கியது அந்த பொழுது. செல்பேசி ஒலிக்கும்போதெல்லாம் அழைப்பது அவளாக இருக்கக்கூடாதா என ஏங்கினேன்.. அப்படியே நகர்ந்தது நாட்கள் அவளின் நினைவுகளிலும் கனவுகளிலும்... பின் ஒரு நாள் இரவு மொட்டைமாடியில் ஆகாய நிலவின் அழகை ரசித்துக்கொண்டே, பூமியின் நிலவாம் அவளையும் நினைத்துக்கொண்டே, இளையராஜாவின் காதல் கீதநதியில் காதுகளை நனைத்துக்கொண்டிருந்தேன். அந்த கணம் ஒலித்தது என் செல்பேசி அழைத்தது அவள்தான் ஆனால் பேசியதோ வேறொரு பெண்ணின் குரல். இது அவள் குரல் இல்லையே சந்தேகித்தது மனது. மறந்து போகக்கூடிய குரலா அது. அன்று நான் கேட்ட அந்த குரல் இளையராஜா பதிவு செய்த பாடலைப்போல மனதில் பதிந்து போயிருந்தது. "கார்த்திக்"கா எனக்கேட்டு ஆரம்பித்தது அந்த சந்தேகக்குரல். ஆமா நான் கார்த்திக் தான்.. நீங்க என்றேன். என்னோட படத்துல ஹீரோவா நடிக்கணும் ஹால்சீட் கிடைக்குமா என்று கேட்டது அக்குரல். நான் கோபமாக, ஹலோ நான் நடிகர் கார்த்திக் இல்லை. போட்டோகிராபர் கார்த்திக் என்றேன். பின் ஹேய் லூசு என அருகில் கேட்டது அந்த அழகி(ய)யின் குரல் அடுத்த கணமே கை மாறியது செல்பேசி. "ஹலோ சாரிங்க என் ஃபிரண்ட் தெரியாம பேசிட்டா ப்ளீஸ் கோச்சுக்காதீங்க" என நீண்டது குரல். அவள் குரலேதான் என தீர்மானித்தது மனது. பின் நான், பரவாயில்லங்க நீங்க யாரு எனக்கேட்டேன் அறியாதவன்போல். அவளோ என்னோட பெயர் பிரியா. நிச்சயதார்த்தம் அன்னைக்கு மஹால் ல மீட் பண்ணோமே மறந்துட்டிங்களா என்றாள். நானோ மறக்கக்கூடிய நிகழ்வா அது என மனதில் நினைத்துக்கொண்டு, மறந்ததுபோல் நடித்தேன். சரியா ஞாபகமில்லங்க.. எப்போ எங்கே என கொஞ்ச நேரம் நடித்தேன். பின் குறுகிய நொடிகளில் ஒரு வழியாக ஞாபகம் வந்துவிட்டதென ஒப்புக்கொண்டேன். பின், நான் எப்போங்க உங்க அக்காவுக்கு மேரேஜ் என்றேன்..நான் அதுக்காக கால் பண்ணலனு சொன்னாள். நானோ ஒன்றும் புரியாதவனாய் பின்னே எதுக்கு என்றேன். மீட் பண்ணும்போது சொல்றேன் எப்போ மீட் பண்ணலாம்னு கேட்டாள்... நாளைக்கு ஒர்க் இருக்குனு சும்மா பிஸியாக இருப்பதாக பீலா விட்டேன்...அவள், நீங்களே எப்போ ஃப்ரீனு சொல்லுங்க மீட் பண்ணலாம் என்றாள். என்னால் இந்த குரலைக்கேட்டுவிட்டு இந்த இரவைக்கழிப்பதே சிரமம். வாரம் தாண்டக்கூடாதென நாளை மறுநாளே என்றேன். சரி ஓகே மீட் பண்ணலாம்..குட் நைட் என கட் ஆனது அவளது குரல். அன்றைய இரவு இளையராஜாவின் கீதமும், அவளின் குரல் மீதமுமாக கழிந்தது.
விடிந்தது மறுநாள் அவளின் நினைவில் மட்டுமே கரைந்தது அன்றைய ஒருநாள்.. மறுநாள், அவளை சந்திப்பதாகச் சொன்ன நாள் காலை வேளை. முகத்திற்கு சோப் முப்பது தடவை தேய்த்தும் திருப்தி அடையவில்லை... குளித்து முடித்தேன் அரை மனதாக.. வேக வேகமாக கண்கள் புது உடைகளைத்தேடி... வாசனைத்திரவியங்களும் காலியானது. கண்ணாடியும் கண்ணீர் வடிக்கும் அளவிற்கு முக அலங்காரம்... அவளது அழைப்பிற்கு காத்திருந்து  கடந்தேன் காலை 11 மணியை... பிறகு வெட்கம் விட்டு நானே அவள் செல்பேசிக்கு அழைத்தேன்.. கடைசி ரிங்கில் அட்டென்ட் செய்தாள்.. ஹலோ என்னாச்சு இன்னிக்கு மீட் பண்ணலாம்னு சொன்னீங்களே என்றேன். அவளோ, ஆமா என்றாள் அமைதியாக. நான் ஏன் வரல என்றேன்... ஈவ்னிங் தானே மீட் பண்றேன்னு சொன்னேன் என்றாள். நான் அவசரப்பட்ட அப்பாவியாய் அமைதியுடன் சரி என்றேன். பின் மாலை வேளையும் வந்தது மங்கையவளும் வந்தாள்... காபி ஷாப்பில் அவளுக்கு முன்னாலேயே வந்துவிட்டேன் நான் . அவள் நடந்து வரும் அழகை கண்ணிமைக்காமலும், அவள் கண்காணிக்காமலும் ரசித்தேன்.. சிறு புன்னகையை என்மேல் தூவிவிட்டு என் நேர் எதிரே அமரந்தாள் அந்த அழகி...!
காதல் தொடரும்...

                                                பகுதி-3


அந்த அழகி அருகில் அமர்ந்ததும், அவள் அள்ளித்த்தெளித்திருந்த வாசனைத்திரவியம் மணம் கமழ்ந்ததும் அவளே ஆரம்பித்தால் "ஹாய், ஹவ் ஆர் யூ..? பதிலுக்கு நான் ம்ம்ம் ஃபைன் என்றேன்.. தென், அவளுடைய சின்ன வயது போட்டோவை என் கையில் கொடுத்து, ஹவ் மச் ஃபார் எடிட் ஒர்க் இன் திஸ் போட்டோ? எனக் கேட்டாள். அதற்கு நான், நீங்களும் தமிழ் தான் நானும் தமிழ் தான் எதுக்கு இந்த புதுமொழி? தமிழ்லயே பேசலாமே என்றேன். நான் அறைகுறை ஆங்கிலம் என்பதை இந்நேரம் அவள் அறிந்திருக்கக்கூடும். பின், தமிழ்லயே நக்கலாக புலவரே, இந்த பழைய புகைப்படத்தை புதுப்பித்துத்தர எவ்வளவு ரூபாய்? என்றாள். உடனே நான், அதுக்காக செம்மொழியில் பேசி தமிழை வாழவைக்கவேண்டாம் என்றேன். தெரிக்கவிட்டாள் தெத்துப்பல் சிரிப்பை....! அதை இரு கண்களில் பொறுக்கிகொண்டேன்.


பின், நான் நார்மல் சைஷ் னா 250 ரூபாய் வரும்னு சொன்னேன். அவள், ஓகே... எப்போ கிடைக்கும் என்றாள் நான், நாளைக்கழிச்சு வாங்கிக்கோங்க என்றேன். தலையசைத்து ம்ம்ம் என முற்றுப்புள்ளி வைத்தாள். ஆரம்பித்தேன் நான், இதை ஸ்டூடியோல வந்து கொடுத்திருக்கலாமே...? எதுக்கு இவ்ளோ தூரம் காபி ஷாப் வரைக்கும் என்றேன். அதற்கு அவள், சிறு புன்னகையை பரவிவிட்டபடி, இல்லை உங்க கூட ப்ரண்ட்ஸிப் வச்சுக்கனும் என்றாள். ஏன் என்கூட? என்றேன் நான்.  அப்போதானே என்னோட மேரேஜ்க்கு ஃப்ரீயா வீடியோகவரேஜ் பண்ணித்தருவீங்கனு மொக்கை போட்டாள். நானோ, செம காமெடிங்க வீட்ல போயிட்டு சிரிக்கிறேன் என்றேன். மிளகாய் மூக்கைக்கொண்டு முறைத்தாள். நான் , ஜஸ்ட் ஃபார் ஃபன்.. கூல் என்றேன். ஒலித்தது என் செல்(ல)ப்பேசி "என் இனிய பொன் நிலாவே" அதே ரிங்டோன்.. பேசிமுடித்துவிட்டு பாக்கெட்டில் வைத்தேன்.. உடனே அவள் இளையராஜா ன்னா பிடிக்குமா? என்றாள்.. நானோ இல்லை அவரோட மியூசிக் பிடிக்கும். என்றேன். ஐயோடா என்றாள் அழகாக..! உங்களுக்கும் பிடிக்குமா என்றேன்... ம்ம்ம்ம்ம்ொம்ம்ம் ரொம்ப என்றாள். ரொம்ப பிடிச்ச பாடல் என்னனு கேட்டேன். "ராஜா ராஜ சோழன் நான் என்னை ஆழும் காதல் தேசம் நீதான்" என்றாள். நான் உடனே நானா ? னு கேட்டேன். ஹலோ எனக்கு பிடிச்ச பாட்டுங்க என்றாள். பிடித்த நடிகர் ? என்றேன். அவள் விஜய் என்றாள். அவள் உடனே உங்களுக்கு என்றாள். நான் "தல"னு சொன்னேன். அவள் அஜித் தா? என்று கேட்டாள். தமிழ்நாட்டுல "தல"னு சொன்னாலே அஜித் சார் மட்டும்தான்'னு சொன்னேன். "மம்கும்" என்று முறைத்துக்கொண்டாள் அவள். இளையராஜாவுல பிக்கப் ஆனது, இளையதளபதினாலே ப்ரேக்-அப் ஆகிருமோனு யோசித்துக்கொண்டேன் நான்.

காதல் தொடரும்...!

                                                 பகுதி -4

பின் மறுநாள் கழித்து அந்த அழகியின் புகைப்படம் ரெடியாகிவிட்டது... அழைத்தேன் அவள் எண்களுக்கு.. போட்டோ ரெடியாகிருச்சு. அன்னைக்கு மாதிரியே காபி ஷாப்-க்கு வந்து வாங்கிக்கோங்கனு சொன்னேன். சரி ஓகேனு சொல்லிட்டா. பின் காபி ஷாப்பில் காத்திருந்தேன். பாவி மக பல மணிநேரம் கழிச்சு வர்றா. வந்த உடன் வழக்கம்போல் மந்திரப்புன்னகையை தூவிவிட்டு அமர்ந்தாள். அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தால், எந்த ஆம்பளைக்கும் பேச்சு வருவது சிரமம். அடிக்கடி புருவ ஓரத்தில் ஒதுங்கும் ஓரிரு முடிகளும், அதை நேராக கோதிவிடும் அந்த வளையல் கைகளும் அடடா... சொக்கித்தான் போவான் படைத்த பிரம்மனும்...! இதையெல்லாம் ரசித்துக்கொண்டிருக்கும்போதே பாதியில் ஆரம்பித்தால், போட்டோவை பார்த்துவிட்டு, சிரித்துவிட்டு, இது நான்தானா ? ரொம்ப அழகா டிசைன் பண்ணிருக்கீங்கனு பாராட்டிவிட்டாள்.... "இந்த பேக்கிரவுண்ட் டிசைன் செம" என்றாள். பாவம் அவளுக்கு எப்படி தெரியும் அந்த புகைப்படத்தில் அவள் இருப்பாதாலேதான், டிசைன் அவ்வளவு அழகாகத்தெரிகிறதென...! "உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு" என்றாள். உடனே நான், இந்த போட்டோ பிடிச்சதனாலா சொல்றீங்களா? என்றேன். ச்சே அதுக்காக இல்லை. நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க அதான்னு வழிந்தாள்.


நான் அதிகமாக ஏதும் பேசவில்லை என்பது எனக்கும், படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும் மட்டும்தான் தெரியும். இப்படி இருக்கையில், என்னுடைய பேச்சு பிடித்திருக்கிறதென பிதப்புகிறாள் கள்ளி. சரி, நாமும் காதலை கற்பனையாக வளர்க்ககூடாது என என் மனதிற்கு கட்டுப்பாடு விதித்துக்கொண்டேன்.
பின், டைம் ஆச்சு. நான் கிளம்பட்டுமா? என்றாள். வந்தது எனக்குள் கோபம் அவள் கைக்கடிகாரத்தின் மீது. அவள் என்னுடன் செலவிட்டது மூன்று மணி நேரம் என்றாலும், மூன்றே நிமிடங்கள் போலத்தோன்றியது. "உங்க வாட்ச் ஃபாஸ்ட்டா ஓடுதுனு நினைக்கிறேன். நல்லா வாட்ச்ச பாருங்க" என்று வழிந்தேவிட்டேன் அவள் செல்லப்போகிறாள் என்ற அவசரத்தில். அவளோ நான் வழிகிறேன் என்பதறிந்து மெளனமாய் சிரித்துக்கொண்டு,
செல்பேசியில் டைம் பார்த்துவிட்டு டைம் சரிதாங்க. ஆமாங்க எனக்குதான் டைம் சரியில்ல போல என மனதில் நினைத்துக்கொண்டே, மெல்ல தலையசைத்து சரிங்க கிளம்புங்க என்றேன். அவள் கொண்டுவந்திருந்த ஹேண்ட்பேக்கை கையில் எடுத்துக்கொண்டு, திரும்பி நடக்க ஆரம்பித்தால். நானோ பின்னால் நின்றிருந்தது, அவள் நடையசைவில் பின்னழகை மேடையாகக்கொண்டு, மல்லிகைப்பூ பூத்த ஜடை நடனமாடுவதை, அவள் நிழல் மறையும் வரையில் ரசித்துக்கொண்டிருந்தேன்.

காதல் தொடரும்...!

                                             பகுதி - 5

அதன் பின் சந்திக்காமலே, மொபைல் சாட் மட்டும் என நீண்டது நாட்கள். பல விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். ஒருவரை ஒருவர் புரிந்தும் கொண்டோம். பின் நானும் சந்திக்க ஆசையிருந்தும் சந்திக்கக்கேட்டு அழைக்கவில்லை.
பின் ஒரு நாள் அவளே அழைத்தாள் சந்திப்போமா எனக்கேட்டு. நானும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்றேன். இந்தமுறை சற்று வித்தியாசமாக காபி ஷாப்க்கு பதில் கடற்கரை. லொகேஷன் செலக்ஷன் அவள்தான்.. வெகுநேரம் மெளனம், கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் புன்னகை என அவளது முகத்தில் ஏதோ இனம்புரியாத சந்தோஷம் வட்டமிட்டுக்கொண்டிருந்தது. என்ன இன்னிக்கி ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க போல.. என்றேன். அவள் அப்படி ஒன்னும் இல்லையே எப்போதும் போலதான் இருக்கேன் என்றாள். நான் ம்ம் என்றேன்.


கடல் அலைகளை ரசித்துக்கொண்டிருந்தாள். பின் நீங்கதான் நல்லா கவிதை எழுதுவீங்களே... கடலை பத்தி ஒரு கவிதை சொல்லுங்களேன் என்றாள். நான் உடனே, கவிதை எழுதுவேங்க, பட் இப்படி திடீர்னு கேட்டா சொல்லத்தெரியாதுங்கோ என்றேன். அவள் சிறு புன்னகையுடன் பரவாயில்லை சொல்லுங்க ப்ளீஸ் என்றாள். நான் சற்றும் யோசிக்காமல் வாயில் வந்ததை உளறினேன். "பூமித்தேவதை அடிக்கடி போர்த்திக்கொள்ளும் நீலவண்ணப்போர்வை...! என்றேன். அடிக்கடி போர்த்திக்கொள்ளுமா ? என்றாள் குழப்பத்துடன். "அடிக்கடி கரைதொடும் அலைகளை" சொன்னேன் என்றேன் நான். வாவ் செம..! என்று கூறி கை பிடித்து குலுக்கத்தொடங்கிவிட்டாள். எலுமிச்சை நிறக்கைகள் கொண்டு, மாநிறக்கைகளை மிச்சம் வைக்காமல் குலுக்கிவிட்டாள். நானும் சேர்ந்து குலுங்கிவிட்டேன்...! சந்திப்பு முடிந்தது. அன்று இரவு 7.10 மணிக்கு, மூன்று குறுஞ்செய்திகள் வந்திருந்தது. வேலை நிமித்தமாக நானும் கவனிக்கவில்லை. 7.15 க்கு அவளது அழைப்பு, என்னை பிடிக்கலயானு கேட்டாள். நானோ என்ன திடீர்னு கால் பண்ணி புடிக்கலையானு கேட்குறா? என்ற குழப்பத்தோடு ம்ம்ம் புடிச்சிருக்கு என்றேன். அப்போ ஏன் ரிப்ளை பண்ணல? என்றாள். நானோ, எதுக்குங்க ரிப்ளை பண்ணல என்றேன். நான் "ஐ லவ் யூ" னு மெஸேஜ் பண்ணிருந்தேன் நீங்க ரிப்ளை பண்ணவேயில்ல என்றாள். ஐ லவ் யூ வா ........!!?? உடனே போனை கட் பண்ணிட்டு வேகமாக மெஸேஜ ஓபன் பண்ணேன். I Love U Karthik னு மூணு மெஸேஜ் வரிசையாக வந்திருந்தது. திகைத்தே போனேன். வேகவேகமாக அழைத்தேன் அவள் அலைபேசிக்கு... கோபத்தில் அட்டெண்ட் செய்ய மறுத்துவிட்டாள். ஐந்து நிமிடம் கழித்து அவளே அழைத்தாள். மறுமனையில் ஆண்குரல். டேய் இன்னும் என்னடா பண்றே கிளம்பி ஸ்டுடியோ வாடா... ஃபன்சன் இருக்கு. பிறகுதான் தெரிந்தது கண்டது கனவு என்று... நேரமோ காலை 8 மணி.

காதல் தொடரும்...!

                                         பகுதி - 6

பின் அவளின் நினைவுகளிலும் கனவுகளிலும் நாட்கள் நகர்ந்தது. திடீரென ஒரு நாள் இரவு அலைபேசியில் அழைத்தாள். வழக்கம்போல கனவு அல்ல நிஜம் தான் என கையில் கிள்ளிகொண்டு உறுதிப்படுத்தினேன். ஹலோ, பிரசாந்த். டுமாறோ மீட் பண்ணலாமா என்றாள். சரிங்க டைம் சொல்லுங்க என்றேன். Evening 4'o clk at Ramanathaswamy Temple னு சொன்னாள். கோவிலுக்கா? ஏன் கோவிலுக்கு கூப்டுறானு தெரில. சரி போவோம்னு கிளம்பினேன். கோவிலில் சந்தித்துக்கொண்டோம். மணம் மாறாத அதே புன்னகை. நீலமும் வெள்ளையும் கலந்த வானம் போன்ற சுடிதார். வானத்திலிருந்து வந்திருப்பாளோ என்னவோ...! பேச ஆரம்பித்தாள். கடவுள் நம்பிக்கை இருக்கானு கேட்டாள். கடவுள் இருக்காறா இல்லையானு தெரியாதுங்க. பட், நம்மளயும் மீறி ஏதோ ஒரு சக்தி இருக்கு. அதை நான் நம்புறேன். அது இயற்கையாக கூட இருக்கலாம் னு சொன்னேன். அவள், இதுக்குத்தான் கவிதை எழுதுறவங்க கிட்ட அதிகம் கேள்வி கேட்கக்கூடாது போல, இயற்கை அது இதுனு அடிச்சு விடுறீங்களே என்றாள். ஹலோ, என்னோட ஒபினியன் நான் சொன்னேன் அவ்ளோதான் என்றேன் கோபமாக. அவள் முகத்தை பார்த்து கோபப்படுவது என்பது நான் சிரமப்படும் சில விஷயங்களில் ஒன்று. முகத்தை பார்க்காமல் தான் கோபப்படமுடிந்தது. ஒருவேளை இருவருக்கும் திருமணமானால் பாவம்தானே நான்...! அவள் உடனே சரி சரி கூல்டவுன் கோபம் வேண்டாமே என்றாள். ஒருவழியாக சாமி கும்பிட்டாச்சு, திருநீர் வச்சாச்சு.


உங்களுக்கு எந்த மாதிரி ஒய்ஃப் வரணும்னு ஆசைப்படுறீங்க எனக்கேட்டாள். பெரிசாலாம் ஆசைப்படலங்க. சர்வம் படத்தில ஆர்யா, த்ரிஷாவை பார்க்கும்போதெல்லாம் மனசுக்குள்ள இளையராஜா மியூசிக் வாசிப்பாறே?? அது மாதிரி ஃபீல் ஆகணும் என் பொண்டாட்டிய பாக்கும்போது... என்றேன். அவள் ம்ம்ம்ம்ம் சூப்பர். சிரிச்சிக்கிட்டே நீங்க ரொம்ப சினிமா பைத்தியமா இருப்பீங்களோ..? என்றாள். ஹலோ, ஜஸ்ட் அது ஒரு ஃபீல் அவ்ளோதாங்க என்றேன் நான். ம்மம் ஓகே அப்படி பொண்ண இன்னும் பாக்கலயோ? எனக்கேட்டாள். நானோ, ஆல்ரெடி பாத்தாச்சுங்க என்றேன். அவள் முகத்தில் சிறு பதற்றத்துடன் யாரைப்பாத்தீங்க.. அப்போ ஆல்ரெடி லவ் பண்றீங்களா? ஏன் எங்கிட்ட சொல்லலணு அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கிவைத்தாள். நான் வெயிட் வெயிட், பாத்தேன்னு தானேங்க சொன்னேன் அவங்ககிட்ட என்னோட லவ்வ சொல்லி, லவ் பண்றேன்னு சொல்லலேயே.. என்றேன். உடனே அவள் ஏன் சொல்லல அதையும் சொல்ல வேண்டியதானே என்றாள் கோபத்துடன். அவங்க தப்பா நினச்சுட்டாங்கனா நான் என்னங்க பண்றது, நல்ல ஃப்ரண்ஷிப் போயிடுமே என்றேன். ஓ ப்ரண்ஷிப் புடுச்சுட்டீங்களா? என்றாள். ம்ம்ம்ம்ம் என்றேன் நான். அப்போ யாருனு சொல்லுங்க நான் பேசுறேன் என்றாள். நானோ, கூப்பிட்ட குரலுக்கு உடனே வராத தைரியத்தை, வா என வரவழைத்துக்கொண்டு, "ஓகே அப்போ உங்க வீட்டுக்கண்ணாடி முன்னாடி போய் நின்னு எனக்காக அவங்ககிட்ட பேசிப்பாருங்க ப்ளீஸ்" என்றேன். கண்ணாடி முன்னாடியானு யோசித்துவிட்டு, பிறகு யார சொல்றீங்கனு கேட்டாள்.  "ஏய் மண்டுப்பெண்ணே... உன் வீட்டுக்கண்ணாடி முன்னாடி போய் நில்...! அக்கண்ணாடிக்கு என் காதலியின் முகம் பரீட்சயம்" என்று கவிதை வடிவிலேயே என் காதலை மறைமுகமாக கூறிவிட்டேன். அதிர்ந்துவிட்டாள் அந்த அழகி...!

காதல் தொடரும்...!

                               பகுதி -7

 பின் அவள் ஏதும் பேசாமல் சென்றுவிட்டாள். நான் அவள் விருப்பமறிய முடியாமல் அங்கேயே நின்றுவிட்டேன். பின், சிறிது நேரம் கழித்து அவளிடமிருந்து அலைபேசி அழைப்பு... ஹலோ, என்னை தான் லவ் பண்றீங்களா? னு கேட்டாள். நான், ஏன் உங்கவீட்டுல கண்ணாடி  இல்லையானு காமெடியாகக் கேட்டேன். அவள், ம்ம்ம் இருக்கு. அதுல என்னோட முகம்தானே காட்டுது. அப்போ என்னைதானே லவ் பண்றீங்கனு கேட்டாள். நானோ ம்ம்ம் அதில் என்ன சந்தேகம்? எனக்கேட்டேன். அவள் எனக்கு காதலில் நம்பிக்கையில்லை என்றாள். அப்போ என்னை பிடிக்கலையானு கேட்டேன். அவள், நான் அப்படி சொல்லலயே காதல் பிடிக்காதுனு தானே சொன்னேன் என்றாள். அப்போ கல்யாணத்தில்? என்றேன் நான். ம்ம்ம் என்றாள். அப்போ வாங்க கல்யாணம் பண்ணிக்குவோம் என்றேன். என்ன விளையாடுறீங்களா? எங்க அப்பா அம்மா சம்மதத்தோடதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன் என்றாள். சரி உங்க அப்பா அம்மா கிட்ட வந்து பேசட்டுமா என்றேன். வேண்டாம் எனக்கு பயமா இருக்கு என்றாள். அப்போ என்னை பிடிக்கலை அப்படித்தானே என்றேன். அய்யோ உங்கள ரொம்ப பிடிக்கும். பட், பயமா இருக்கே என்றாள். ஆம், அவள் பயப்படுவதற்கு காரணம் நான் வேறு ஜாதி, அவள் வேறு ஜாதி என்பதாலே திருமணத்திற்கு சம்மதிக்கமாட்டார்கள் புரிந்துகொண்டேன். இருந்தும் அவளை விட்டு விலக மனமில்லை. எத்தனை நாள் இந்த தேவதையை தேடி அலைந்திருப்பேன் நான்...! உடனே நான், பயப்படாதீங்க நான் பேசிக்கிறேன்னு சொல்லிட்டு போனை வச்சுட்டேன். அடுத்த நாளே அவள் வீட்டுவாசப்படியில் நின்றேன். வழக்கம்போல் "வராத தைரியத்தை" வரவழைத்துக்கொண்டு, அழைப்பு மணியை அழுத்தினேன். அவளுடைய அப்பாவே கதவைத்திறந்தார். எங்கள் திருமணக்கதவையும் அவர்தான் திறக்கவேண்டும். என்னை நேருக்கு நேர் முகம் பார்த்து, வாங்க தம்பி, யார் நீங்க என்ன வேணும்னு கேட்டார். நான், உங்க பொண்ணுதான் வேணும் தருவீங்களா மாமானு மனதிற்குள் கேட்டுக்கொண்டு, என்னோட பெயர் கார்த்திக். நான் இங்க இராமேஸ்வரத்தில் சொந்தமா போட்டோ ஸ்டுடியோ வச்சுருக்கேன் என்றேன். சரி தம்பி நல்லது என்றார். நான் உடனே, உங்க பொண்ணு பிரியாவ ஒரு ஃபன்சன் ல பாத்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. மேரேஜ் பண்ணிக்க ஆசைப்படுறேன். நீங்க சம்மதம் சொன்னா, அப்பா அம்மாவை வந்து பேச சொல்றேன் என்று ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் பட படவென உளறிவிட்டேன். பின் அவர் ஆரம்பித்தார், தம்பி உங்க பேரு என்ன சொன்னீங்கனு கேட்டார். கார்த்திக் என்றேன். கார்த்திக் தம்பி உங்க மாத வருமானம் எவ்வளவுனு கேட்டார். நான் தோராயமாக, ஒரு 15,000 ரூபாய் வரும் என்றேன். உங்கள மாதிரி மிடில் கிளாஸ் ஃபேமிலிதான் சார் என்றேன். உடனே அவள் அம்மா குறுக்கிட்டு, தம்பி நீங்க என்ன ஆளுங்க என்றார். அதானே என்னடா இன்னும் யாரும் கேட்கலயேனு நினைச்சேன். நான் வேற ஜாதி தான். பட், உங்க பொண்ண நல்லா வச்சு பாத்துக்க ஜாதி தான் முக்கியமா? என்று ஏதோ வேகத்தில் பேசிவிட்டேன். உங்க பொண்ண உங்கள விட பத்துமடங்கு நல்லா பாத்துப்பேன் ப்ளீஸ் என்னை நம்புங்க என்றேன். அவள் அப்பா திடீரென, இந்த காலத்தில ஜாதி அது இதுனு சும்மா இருடி என்றார். அப்பாடா நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.


ரெண்டு பேரும் லவ் பண்றீங்களானு கேட்டார். இன்னும் இல்லை, கல்யாணத்துக்கு பிறகு காதலிக்க ஆசைப்படுகிறேன் என்றேன். ம்ம்ம் ஏதோ மனதில் யோசித்துக்கொண்டார். உடனே, இங்கே என்ன நடக்கிறது, நடந்தது என்பதை அறியாமல் ரூமில் நகத்தை கடித்துக்கொண்டிருந்த என் தேவதையை அழைத்தார். அம்மா பிரியா.....இங்க வாமா. வந்தாள் என் தேவதை, வழக்கம்போல் புன்னகை பூத்திருக்கவில்லை மாறாக பயம் கலந்த பதட்டத்தில் இருந்தாள். உடனே அவர், தம்பி கார்த்திக்க உனக்கு பிடிச்சுருக்காமான்னு கேட்டார். அவள் ம்ம்ம் நல்ல ஃப்ரெண்டுப்பா. அதோடு நிறுத்திக்கொண்டாள். நான் அதை கேட்கலம்மா உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்குறாரும்மா என்றார். உங்களுக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம் தான் அப்பா என்றாள் புத்திசாலிதனமாக. ம்ம்ம் சரிம்மா என்றார். உடனே என்னிடம் ம்ம்ம் சரி தம்பி யோசிச்சு சொல்றேன் உங்க அப்பா அம்மாவ வர சொல்லுங்க என்றார். ஆனால் அவர் ஒரு வார்த்தைக்காக்கூட என்னை மாப்பிளைன்னு சொல்லவில்லை.
காதல் தொடரும்...!
                                 
                                     பகுதி - 8

பின் இரண்டுநாட்கள் கழித்து அவரே அலைபேசியில் அழைத்தார். தம்பி எனக்கு சம்மதம் தான். ஆனால், என் பொண்டாட்டி தான் கொஞ்சம் முரண்டுபுடிக்கிறா. அதை நான் பாத்துக்குறேன் தம்பி. நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க. அப்புறம், பிரியா குட்டி என் செல்லப்பொண்ணு தம்பி. அவள அழ வைக்காம பாத்துக்கோங்க தம்பி. கொஞ்சம் முன்கோபம் ஜாஸ்தி. ஆனா நீங்க அன்பா எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா. கொஞ்சம் அனுசரிச்சு போங்க தம்பி என்றார். உங்க பொண்ண பத்தி உங்களுக்கு தெரிஞ்சதவிட, எனக்கு என் பொண்டாட்டிய பத்தி ஒருபடி அதிகமாவே தெரியும் மாமா என்றேன். சிரித்துக்கொண்டே ம்ம் சரி தம்பி, உங்க அப்பா அம்மாவ வந்து பொண்ணு கேட்க சொல்லுங்க தம்பி என்று போனை கட் செய்தார். அப்பொழுது கூட, "மாப்பிளை" என்று அழைக்க மறுத்துவிட்டார். ஒருவேளை கல்யாணம் நடந்து முடிந்த பிறகுதான் மாப்பிளைனு கூப்டுவாறோ என குழம்பிக்கொண்டேன். காலம் தாழ்த்தாமல் மறுநாளே அப்பா அம்மாவுடன் சென்று அந்த தேவதையை பெண் கேட்டு, பேசிமுடித்தாயிற்று. இரண்டு மாதங்கள் கழித்து கல்யாணம். ஏதோ ஓர் நிச்சயதார்த்தத்தில் ஆரம்பித்த என் காதல், இன்று திருமணமாக நிச்சயமாயிற்று. அவள் அம்மாவோ அரைமனதாக ஒப்புக்கொண்டாள். பின் என்ன பிரச்சினை எல்லாம் சுலபமாக முடிந்துவிட்டதே... இனி கல்யாணம் தானே...! இருவரும் காதலிக்க ஆரம்பிக்காமலே இவ்வளவு எளிதாக காதலில் ஜெயிக்கமுடியுமா எங்களுக்குள் வியந்துகொண்டோம். திருமணத்திற்கு தான் இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறதே. இந்த இரண்டு மாத நாட்களையாவது என் தேவதையை, "காதலி"யாக்கி கழித்துவிட எண்ணினேன். ஆரம்பித்தது எங்கள் காதல் பயணம். அவளுடைய பிறந்தநாளும் வர இருப்பதால் அவள் பிறந்தநாளன்றே காதல் பயணத்தை ஆரம்பிக்கலாமே என எனக்குள் தோன்றியது. இருவரும் ஒன்றாக, முதன் முதலாகச்
சென்றது, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணிற்கு தான். நாங்கள் செல்வது தமிழை வளர்க்க அல்ல ஹா ஹா ஹா ஹா.... எங்கள் காதலை வளர்க்க...! முதன்முதலாக ஒரு பெண்ணின் அருகில் மிக நெருக்கமாக அமர்ந்திருக்கிறேன். அடிக்கடி கூச்சம் எட்டிப்பார்த்துக்கொண்டே இருக்கிறது. பேருந்து பயணம் என்றாலே முக்கால்வாசி பேருந்துகளை இளையராஜாவின் இசையே ஆக்கிரமித்திக்கொண்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இருவருக்கும் பிடித்த பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒலித்துக்கொண்டிருக்க, எனக்குள் ஒழித்துக்கொண்டிருந்தது ஒரு ரகசியம். மதுரையில் எங்கே? என்ன? பார்க்க கூட்டிச்செல்கிறேன் என்பது அவளுக்கு தெரியாது. 


செல்லமாக நச்சரித்துக்கொண்டே இருந்தாள் அந்த "நச்" உதடுகளில். மதுரையில் இறங்கியதும் சொல்கிறேன் என்றுகூறி அவள் நச்சரிப்புக்கு தடைபோட்டேன். ஏதோதோ பேசிக்கொண்டே வருகிறாள். அவள் பேசும்பொழுது, உதடுகள் உரசும் அழகைத்தான் கவனித்தேனே தவிர, என்ன பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதை தவறவிட்டேன். அடிக்கடி என் முகம்பார்த்து தான் பேசுகிறாள். பதிலுக்கு நானும் அவள் முகம் பார்ப்பது எளிது. ஆனால் அந்த பட்டாம்பூச்சி கண்களை எதிர்கொள்வதுதான் ரொம்ப கடிது. அவளுக்கு தலைமுடி கொஞ்சம் நீளம் என்பதால் நிமிடத்திற்கு நிமிடம் பேருந்தின் ஜன்னலோர காற்று, அவள் தலைமுடிகளை என்மேல் தூற்றுகிறது. அடடா அடிக்கடி என் முகத்தில் பட்டு, கூச்சம் தரும் அந்த கூந்தலை பிரம்மன் எதைக்கொண்டு செய்தானோ தெரியவில்லை. ஜன்னல் வெளியில் இயற்கை காட்சிகளை ரசித்தபடியிருந்தவள் திடீரென என் கைகளை பற்றி, என் தோல்மேல் தொற்றி சாய்ந்து கொண்டாள். சற்றும் எதிர்பார்க்கவில்லை நான் ஏதோ ஒரு பலம் உள்ளுக்குள் உருவாகி, என் ஆண்மையை அறியச்செய்கிறது. மென்மேலும் காதலைப்புரியச்செய்கிறது. "எனக்கு இனிமேல் எல்லாமே நீதானடா" என்பதை உணரச்செய்துவிட்டாள், தோல்மேல் சாயந்துகொண்ட அந்த சில அற்புத நொடிகளில்...! அந்த தருணம், பேருந்தில் அலைகள் ஓய்வதில்லை படத்திலிருந்து "காதல் ஓவியம்... பேசும் காவியம்" பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. பாடல் வரிகள் எங்களுக்காகவே எழுதி, இசையமைத்தது போல் ஓர் உணர்வு ஊர்ந்துகொண்டிருந்தது. நான் அவளுடன் இருந்த பொழுதுகளில் மட்டும்தான் என் வாழ்க்கை பக்கங்கள் முழுதும் கவிதைகளாக மாறியிருந்தது யதார்த்தங்கள் மீறாமல்...!
காதல் தொடரும்..!
       
                                   பகுதி - 9

ஒருவழியாக மதுரை மண்ணை முத்தமிட்டது எங்கள் பாதங்கள். முதலில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச்சென்றோம். மீனாட்சி அம்மன் தரிசனம், ஆயிரம் கால் மண்டபம் என கோவில் முழுதும் சுற்றித்திரிந்து, அங்கே தாமரைக்குளத்தின் அருகே அரைமணி நேரம் அவளுடன் பொழுதை கழித்தேன். கழித்தேன் என்று சொல்வதை விட, சொர்க்க நிமிடங்களையெல்லாம் சொற்பமாகக் கடந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். அடுத்ததாக திருமலை நாயக்கர் மஹால் சென்றோம். அங்கும் சில நிமிட நேரங்கள் கடந்து, மதிய உணவு உண்பதற்காக ஒரு ஹோட்டல் சென்றோம். அங்கே சிறிது தூரத்தில் எதேச்சையாக தென்பட்டது "ஹோட்டல் பிரியா-சைவம்" பெயர் பலகை. (அவள் சுத்த சைவம். நானோ அசைவ விரும்பி. அவளை விரும்பியதால் சைவத்தையும் விரும்ப வேண்டியதாயிற்று). நான், ஹேய் பிரியா இது உன்னோட ஹோட்டல் தானே? அப்போ சாப்பாடு ஃப்ரீயா பிரியா? என நக்கலடித்தேன். ஹேய் கலாய்க்கிறியா எனச் செல்லமாக கையைக்கிள்ளினாள். பில் பே பண்ணலனு வச்சுக்கோ எனக்கும் சேர்த்து நீதான்டா மாவாட்டணும் பாத்துக்கோ என்றாள் சிரிப்புடன். அடிப்பாவி, கல்யாணத்துக்கு முன்னாலயே புருஷனை மாவாட்ட வக்கணும்னு ஆசைப்படுறியாடி என்றேன். அவள், யெஸ். இட் இஸ் ஜஸ்ட் ட்ரெயினிங் டா என் செல்ல புருஷா என்றாள். நானோ மாவாட்டுறதுக்கு மட்டும்தான் ட்ரெயினிங்கா? அப்போ மத்ததுக்கெல்லாம்...????? கண்ணடித்தேன். என் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவளாய், அய்யோடா ரொம்ப வழியுது கொஞ்சம் தொடைச்சுக்கோடா புருஷா என்று கொஞ்சி, கொஞ்சமாக சிரித்தாள். உடனே, வா ஃபஸ்ட் சாப்பிடலாம் ரொம்ப பசிக்குதுடா... என்று சமாளித்து என் கையைப்பிடித்துக்கொண்டு சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்குள் இழுத்தாள். வெயிட்டர் எங்களை நீண்ட நேரம் வெயிட் பண்ண வைத்துவிட்டார். ஆம் ஹோட்டலில் கூட்டம் கொஞ்சம் அதிகம்.. நீண்ட நிமிடங்களுக்குப் பிறகு அருகில் வந்து, என்ன சாப்டுறீங்க எனக் கேட்டார். நான், இப்போதான் புரியுது உங்களுக்கு ஏன் "வெயிட்"டர்-னு பெயர் வச்சாங்கன்னு. இவ்வளவு நேரம் வெயிட் பண்ண வச்சுட்டீங்களே ப்ரோ என்றேன் நக்கலாக. சற்றும் எதிர்பாராமல் சடாலென அவளின் சிரிப்பு சத்தம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டது. சாரி சார் கொஞ்சம் கூட்டம் அதிகமாயிடுச்சு அதான் என்றார் வெயிட்-டர். பரவாயில்லை ப்ரோ இரண்டு புல் மீல்ஸ் கொண்டுவாங்கன்னு ஆர்டர் செய்தேன். உடனே, ஏன்டி இந்த மொக்க காமெடிக்கு இவ்ளோ சத்தமா சிரிக்கிறே என்றேன் அவளிடம். அது என்னமோ தெரிலடா நீ காமெடி பண்ணா மட்டும் என்னால சிரிப்பு அடக்கவேமுடியல என்றாள். என்னைப் பாத்தா காமெடி பீஸ் மாதிரி தெரியுதா என்றேன் முறைப்புடன். ம்ஹீம் மாதிரியெல்லாம் இல்ல நீ காமெடி பீஸே தான் என்று கலாய்க்க ஆரம்பித்துவிட்டாள் கள்ளி.


 நான் நினைத்துக்கூட பார்த்திராத காதல் தருணங்களெல்லாம் என் கண் முன்னே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. திடீரென வந்தது எனக்கு விக்கல். (அவள் ஏதேனும் என்னைப்பற்றி நினைத்திருக்கக்கூடும்) நானே என் தலையில் தட்டிக்கொள்ள முயன்றேன் ஆனால் என் கைக்கு முன்னே முந்திவிட்டது அவளது கை. தலையில் தட்டிக்கொடுத்து, விக்கல் எடுத்த என் வாய்க்கு அவளே தண்ணீரும் கொடுத்தாள். சட்டென தோன்றி மறைந்தது என் அன்னையின் ஞாபகம்..!
காதல் தொடரும்..!

                                      பகுதி- 10

முதல் பயணம் முழுமையடையாமலே முற்றுப்பெற்றது அவளிடமிருந்து ஒரு முத்தம் கூட பெறாமல்..! பின் சந்திக்க நேரங்கள் கிடைக்கவில்லை. அவளுக்கும் வேலை எனக்கும் வேலைப்பளு அதிகரித்துவிட்டது எங்கள் காதலின் பளு கூட...! எனவே இரவு வேளைகளில் செல்லப் பேசியில் குறுஞ்செய்திகளில்(SMS) பெருஞ்செய்திகளாக பரிமாறிக்கொண்டோம் எங்கள் காதலை... இப்படியே எல்லாம் நன்றாகவே நடந்து, நகர்ந்து கொண்டிருக்குமா??? அது வாழ்க்கையாகிவிடுமா...? சாதாரண படங்களில் கூட எதிர்பாராத திருப்பங்களைச் சுமத்தினால்தான் ரசிகர்களின் விருப்பங்கள் அதிகரிக்கிறது. வாழ்க்கையில் அனைவருக்கும் எல்லாமும் நல்லபடியாக சென்றுகொண்டிருப்பதில்லையே. ஆம். எல்லாம் நல்ல படியாக நடந்தும், எல்லோரின் காதலைப்போலவும் என் காதல் வாழ்க்கையிலும் சறுக்கல்களைக் காணநேர்ந்தது. அது என் காதல் பக்கங்களை கிறுக்கல்களாகவும், என்னை கிறுக்கனாகவும் மாற்றிவிட்டது. காதல் என்றாலே துன்பத்தைப்பெற்றுதான் இன்பத்தைப்பெற முடியும் என்பது "காதல்விதி"யோ என்னவோ...! எங்கள் இரு உறவுக்குள் நுழைந்தது ஒரு புது உறவின் வரவு. அவள் பெயர் நிஷா. என் நண்பனின் தோழி. என் நண்பன் மூலமாகவே அவள் எனக்கு அறிமுகமானாள். அறிமுகமான சில நாட்களிலே மிக நெருக்கமாக பழகத்தொடங்கிவிட்டாள். நான் ஒன்றும் பெரிய மன்மதன் இல்லை. ஆனால், அன்பினால் மற்றவர்களை மயக்கும் மனம் எனக்கு உண்டு. நிஷாவின் அன்பில் துளியும் காதலுமில்லை, காமமுமில்லை. நல்ல தோழியாகவே உறவைத்தொடர்ந்தால், உரிமை கொண்டாடினாள். மற்ற பெண்களுடன் தோழியாகப்பழகினால் கூட எந்த காதலிக்குத்தான் பிடிக்கும். பிரியாவோ முன்கோபக்காரி. முறைத்துக்கொண்டாள். எல்லா பெண்களுக்கும் இருக்கிற "பொஸஸிவ்னஸ்" குணம் தானே இது என நினைத்துக்கொண்டேன் நான். ஆனால் பிரியாவோ, நிஷாவை தன் பெரிய எதிரியாக பகைத்துக்கொண்டாள். என்னிடம் முன்புபோல் சந்தோஷமாகப்பேசுவதையே குறைத்துக்கொண்டாள்.
எப்போதும் கோபம், மெஸேஜ் செய்தால் உடனே பதில் அனுப்புவதில்லை. (ஓ இதனால் தான் அந்த சறுக்கலா??? என நினைத்துக்கொள்ள வேண்டாம் வாசகர்களே) பின், நேரடியாக பிரியாவைச் சந்தித்துப் பேசினால்தான் தீர்வு காணமுடியும் என தீர்மானித்தேன். சந்தித்தோம். எப்போதும் என் முகத்தைப்பார்த்தே பேசுபவள் இன்று வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு மெளனம் காட்டுகிறாள். நான் பேச ஆரம்பித்தேன். நிஷாவை ஏன் விரோதியாகப் பார்க்கிறாய்..? அவள் எனக்கு நல்ல தோழி. மற்றபடி எங்களுக்குள் எந்த அந்தரங்கமான உறவுகளும் இல்லையென புரியவைக்க முயற்சித்தேன். என் கண்ணத்தில் அடித்தேவிட்டாள். ஒன்றுமே புரியவில்லை எனக்கு. டேய், என் புருஷனைப் பத்தி எனக்கு தெரியும். இதுக்கு மேல எதுவும் பேசாதே என்றாள். பின்னே ஏன் என்கூட சரியாவே பேசமாட்டேங்குறே என்றேன். நிஷா வந்ததில இருந்து நீ என்னைவிட்டு விலகிப்போற மாதிரி ஃபீல் ஆகுதுடா. என்னால முடியலடா. ப்ளீஸ் அவ கூட இனிமேல் பேசாதே என்றாள். கோபம் மூண்டது எனக்குள். ஏய் உனக்கு என்னாச்சு? இதை நிஷா கேட்டா எவ்ளோ ஃபீல் பண்ணுவா தெரியுமா? லூசு இனிமேல் இப்படி பேசாதே. என்னை பத்தி தெரிஞ்சுகிட்டே ஏன் பயப்படற லூசு என முறைத்துக்கொண்டேன். அவளோ எனக்கு பயம் உன்னை நினைச்சு இல்ல. அவள நினைச்சுதான்னு பிடிவாதம்பிடித்தாள். நானும் என் நட்பை விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாய் அங்கிருந்து சென்றுவிட்டேன்.
காதல் தொடரும்...!

7 comments:

 1. Nalla muyarchi.....thodarndhu ezhudhungal.....vaazhthukal

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி...என் முதல் பதிவிற்கு கிடைத்த முதல் பரிசு உங்கள் கருத்து.. மகிழ்ச்சி

   Delete
 2. காதல் நிரம்பி வழியுது,தொடர்ந்து எழுதவும்!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ மிக்க மகிழ்ச்சி

   Delete
 3. என் செல்ல தம்பியின் இந்த முயற்சிக்கு அக்காவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி அக்கா... நன்றி நன்றி நன்றி !

   Delete
 4. super da sema story ...keep it up... congrats ...and best of luck

  ReplyDelete