தமிழ்மணம்

Tuesday, September 29, 2015

பெண்ணே... நீ வெல்ல வேண்டும் இம்மண்ணை...!அன்றைய சமூகம் பெண்களை நடத்திய விதம் :
             ரம்பகாலத்தில் நம் சமூகம் பெண்களை எப்படி நடத்தியது என்பதை நாம் சற்று பின்னோக்கி பார்க்க வேண்டும். உழைத்து முடித்து, களைப்புடன் வரும் ஆணிற்கு பணிவிடை செய்யவும், குழந்தைகளைப் பெற்றெடுக்கும் கருவியாகவும் மட்டுமே பெண்கள் பாவிக்கப்பட்டனர்.

"வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல் மனையுறை மகளிர் ஆடவர் உயிர்"      
                  - குறுந்தொகை

என்று எண்ணப்போக்கை சங்ககால இலக்கியங்கள் உணர்த்துவதை நாம் அறியலாம். உன் வாழ்க்கை முழுவதையும் சமையலறையுடன் முடித்துக்கொள் என உத்தரவிட்டது அப்போதைய சமூகம்.

பெண் சுதந்திரத்திற்கு எதிராக பல கட்டுப்பாடுகளும் விதித்திருந்தன. உடன்கட்டை ஏறுதல், கணவனை இழந்த கைம்பெண்கள் வீதியில் நடமாடக்கூடாது, வண்ண உடைகள் அணியக்கூடாது மாறாக வெள்ளை உடை மட்டுமே அணியவேண்டும் மற்றும் எந்த சுபநிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டு விதிகளும் அப்போதைய சமூகத்தில் இருந்தன.

பெண் சிசுக்கொலை கூட ஒரு வழக்கமாக இருந்ததை நாம் அறிவோம். பெண் பிள்ளை பிறந்தால் அவர்களுக்கு வரதட்சணை கொடுத்து ஏழைகளால் திருமணம் செய்து வைக்க இயலாததை காரணமாகக்கொண்டு அன்றைய காலத்தில் பெண் சிசுக்கொலைகள் நடந்தது. இப்போதும் கூட பெண் பிள்ளைகள் பிறந்தால் குப்பைத்தொட்டியில் வீசிவிடும் துயரமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்கள் விடலைப்பருவம் எய்தியவுடன் அவர்களின் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க முந்தியது அப்போதைய சமூகம். அன்றைய கால பெண்களுக்கு கல்வி அறிவு கூட எட்டாக்கனியாகத்தான் இருந்திருக்கிறது.

இன்றைய சமூகம் பெண்களை நடத்தும் விதம் :
              சமூகம் என்பது ஆண்களும்
பெண்களும் சேரந்த குழுமம் தான்.
இதை ஆண்சமூகம், பெண்சமூகம் என்று பிரித்து பார்த்தாலே பெண்சமூகத்தின் மீதான ஆண்சமூகத்தின் அடக்குமுறை பற்றி புரியும். சமகால சமூகத்தில் பெண்களை சமூகம் நடத்தும் விதம் என்பது, ஆண்கள் பெண்களை வெறும் போதைப்பொருளாக மட்டும் பார்ப்பதென்பது இன்றளவும் குறையவில்லை. அதன் விளைவுதான் பாலியல் வன்கொடுமை. சிறுமிகள் கூட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதுதான் நம் அவமானத்தின் உச்சம்.

சிறுவயதில் இருந்தே ஆணுக்கு பெண்ணை அடக்கி வைக்க  கற்றுக்கொடுத்துவிடுகிறார்கள் தந்தைகள், தாயை அடித்து அடக்கி வைப்பதன் மூலம். ஆண்கள் பெண்களைப்பற்றி வெறும் வார்த்தைகளில் மட்டுமே வர்ணிக்கிறார்களே தவிர வாழ்க்கையில் இல்லை. அவர்களின் சின்ன சின்ன உணர்வுகளுக்குக்கூட மதிப்பளிப்பதில்லை. பெண்கள் தங்கள் பெற்றோர்கள் வீட்டுக்குச்சென்று வருவதில் கூட ஆணின் அனுமதி பெற்றாகவேண்டும்.
தொடக்கப்பள்ளிகளில் பெண்களைக் கேலி, கிண்டல் செய்வதிலேயே தொடங்கிவிடுகிறது ஆண்பிள்ளைகளின் அதிகாரம். பெண்களால் ஆண்களின் அதிகார அடக்குமுறைக்கு அடங்கிப்போகத்தான் முடிகிறதே தவிர வெகுண்டெழ முடிவதில்லை. அப்படி முடிந்தாலும் முடிவு காயங்களுடன் தான் மிஞ்சுகிறது.

பெண்களுக்கு ஆண்கள் உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை அவர்களின் முன்னேற்றத்திற்கு இடையூறுகள் செய்யாமல் இருந்தாலே போதும்.

ஆண்கள் மட்டும்தான் பெண் முன்னேற்றம் தடைபட காரணம் என்று நான் கூறவில்லை ஆணும் ஒரு காரணமே என்று குறிப்பிட்டு கூறுகிறேன். அதே சமயம் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு அவசியமா என்றால், நம் தமிழ்க்கலாச்சாரத்தை சீர்குலைக்கும் மேற்கத்திய கலாச்சார உடைகள் நம் பெண்களுக்கு அவசியமற்றதுதான் என்பதை பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும். பெண் சுதந்திரம் என்பது உடைகளில் மட்டும் இல்லை என்பதை  உணர்ந்துகொள்ளவேண்டும்.

பெண்களே பெண்களுக்கு எதிரியாகிவிடுகிறார்கள் மாமியார் என்ற போர்வையில் வரதட்சணை வாங்கும்பொழுது.
என்ன தான் அரசாங்கம் முழுமுனைப்புடன் பெண்களுக்கு சாதகமாக பல சட்டதிட்டங்களைக்கொண்டு வந்தாலும் வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் ஓயந்துவிட்டதா? ஆண்கள் பெண்களை மானபங்கபடுத்தும் கொடுமைகள் மாய்ந்துவிட்டதா? இன்னும் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டுதானே இருக்கிறது.

"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா"

என்று பாடிய கவிமணி தேசிய விநாயகம்பிள்ளையின் வரிகளை,
இன்று,
     மங்கையராய் பிறந்தபின்னும் 
தன் சுய முன்னேற்றத்திற்காக
மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா 
என்று மாற்றி எழுத வேண்டிய நிலைதான் இன்றளவும் உள்ளது.

பெண்கள் முன்னேற்றத்தைப்பாதிக்கும் காரணிகள் :
                   இன்று படிப்பும் நாகரிகமும் வளர வளர, பெண்களின் உரிமை குறைந்து கொண்டேதான் செல்கிறது. இதற்கு ஆண்களின் தீய நடத்தை மட்டுமே காரணமல்ல. பெண்களின் தவறான வாழ்க்கை இலட்சியமும் ஒரு காரணமே.

சில படித்த பெண்களும், பட்டதாரிப் பெண்களும், பணம் படைத்தவர் வீட்டுப் பெண்களும் மனித சமுதாயத்துக்காகப் பணியாற்றுவதென்பது கிடையாது. மோட்டார் கார், நகை ஆபரணங்கள் உயர்தர உடைகள், உல்லாசப் பொழுதுபோக்குகள், சினிமா, நாடகம் தங்கள் நேரத்தை அதிகமாக செலவிடுகிறார்களே தவிர இவர்களுக்கு வாழ்க்கையில் இலட்சியம் என்பதே பெரும்பாலும் இருப்பதில்லை.

பல பெண்களுக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகத்தொடர்களை தொடர்ச்சியாக பார்த்துவிடுவதே அன்றாட வேலையாகக்கொண்டுள்ளனர் மற்றும் ஆண்களுக்கு நிகராக வருவதற்குப் போராட வேண்டிய பெண்கள் சிலர் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பது மிக வேதனை.

சினிமாக்களிலும் தொடங்கி கிரிக்கெட் விளையாட்டு நடக்கும்பொழுதுகூட பெண்களை கவர்ச்சிப்பொருளாக மட்டுமே சித்தரிக்கின்றனர். அதன் போக்குதான் நம் சமூகத்தின் சீரழிவு. வேலைக்குச்செல்லும் இடத்தில் கூட ஆண்சமூகத்தின் ஆபாசப்பார்வையிலிருந்து அப்பாவிப்பெண்கள் தப்பமுடிவதில்லை. இதனால் பெண்கள் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது பெண்களின் முன்னேற்றத்தை பாதிக்கும் காரணிகளாக நாம் புரிந்து செயல்பட வேண்டும்.

இன்றைய பெண்கள் முன்னேற்றம் :

           பெண் முன்னேற்றம் என்பது ஆண்களைப்போலவே பெண்களும் அனைத்திலும் சமஉரிமையுடன் வாழ்வதே. அதற்கு முதலில் நம் வீட்டுப்பெண்களின் உணர்வுகளை நாம் புரிந்துகொண்டு நடந்தாலே அவர்கள் வாழ்வில் ஒளிவீசிவிட ஆரம்பித்துவிடும். நாம் அவர்களுக்கு முழுசுதந்திரம் கொடுத்து அவர்களின் திறமைகளுக்கு மதிப்புக்கொடுக்கவேண்டும். அது ஒவ்வொரு ஆண்மகனின் கடமை ஏன் இந்த ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையும் கூட அதுதான்.

பழைய காலங்களிலிருந்து இன்றைய சூழல் வரை பெண்களின் வாழ்க்கைத்தரம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் கல்வி மறுக்கப்பட்ட பெண்கள், இன்று கல்வியில் ஆண்களைவிட அதிக விழுக்காடு பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். பைலட்(விமான ஓட்டி) ஆனது முதல் புல்லட் ட்ரெயினை இயக்குவது வரை ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் அவர்கள் மண்ணுள் புதையுண்ட விதைபோலவே, அடிமைத்தனம் என்னும் மண்தரையை முட்டி முட்டி தான் முளைத்து(உழைத்து) முன்னேறவேண்டியுள்ளது. ஒரு ஆணின் முன்னேற்றத்திற்கு பின்னால் ஒரு பெண் நிச்சயம் இருப்பாள் என்று சொல்வார்கள்.
ஒவ்வொரு பெண்களின் முன்னேற்றத்திற்கும் பின்னால் நிச்சயம் வலிகளும் சோதனைகளும் அவர்கள் சிக்கித்தவித்த அவமானங்களும் அடங்கியிருக்கும். இப்படிதான் காயத்தின் வடுகளுடன் காலச்சுவடுகளில் இடம்பெற, பெண்கள் ஆண்களைவிட முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்.

சமூகத்தின் பார்வையில் பெண்கள் மிக மோசமாக மட்டம் தட்டப்படுகிறார்கள் என்றாலும்கூட அதையும் தாண்டி வாழ்க்கையில் வெற்றி என்னும் பட்டம் பெற்றுவிடுகிறார்கள். அரசாங்கம் எங்களுக்கு அதைச்செய்ய வேண்டும் இதைச்செய்ய வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதைவிட, இப்பொழுது அரசாங்கமே ஒரு பெண்ணின் ஆட்சி தானே என்பதை உணர்ந்து பெண்கள் சுயமாகவே முன்னேறவேண்டும். அதற்கு, "பெண்ணே.. நீ நம்பவேண்டும் உன்னை...! நம்பினால் வென்றுவிடலாம் இம்மண்ணை..!

உறுதிமொழி:

இக்கட்டுரையானது,
      "வலைப்பதிவர் திருவிழா - 2015" மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் மின் தமிழ் இலக்கியப் போட்டிகளுக்காகவே எழுதப்பட்டது.
பெண்களை சமூகம் நடத்தும் விதம் மற்றும் பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள் (வகை-3)
எனும் தலைப்பிற்காக எழுதப்பட்டது. 
மேலும் இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடமாட்டேன்  என்றும் உறுதி கூறுகின்றேன். நன்றி...!

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete